சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுமார் 4.5 கிமீ முதல் 5.8 கிமீ உயரம் வரை வட தமிழக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
சுமார் 5.8 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரம் வரை லட்சத்தீவின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, கேரளா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணி வரை 28 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் திண்டுக்கல், மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, தென்காசி, நீலகிரி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




