ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த ரயில் மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய நான்கு மாநிலங்களின் இணைக்கும் விதமாக இதன் வழித்தடம் அமைந்துள்ளது.
இந்த நிலையில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கடந்த 2ம் தேதி மாலை 3:30 வழக்கம் போல மேற்கு வங்க மாநிலம் சாலிமரிலிருந்து புறப்பட்டது. இந்த ரயில் நேற்று மாலை 4:50 மணிக்கு சென்னை வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த ரயில் மேற்கு வங்க மாநிலத்தை கடந்து ஒடிசாவின் பஹனகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருக்கும் போது சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது ரயில் நேருக்கு நேர் மோதியதில் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டன. அப்போது பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற ரயில் தடம்புரண்டு கிடந்த பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.
இந்த விபத்தில் 288 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 13 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, இதுவரை 301 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : ”சிக்னல் பிரச்னையே விபத்துக்கு காரணம்” – ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்
இந்நிலையில், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும், விபத்தில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.








