ஒடிசா ரயில் விபத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் நலமுடன் உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில், தனியார் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலினிடம் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. சென்னையில் பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை மாநகராட்சியிடம் வழங்கிய அமைச்சர் உதயநிதி, குறிஞ்சி இல்லத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்சியில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , சுற்றுச்சூழலை மேம்படுத்த சிறந்த எடுத்துக்காட்டாக மஞ்சப்பை திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தனியார் பங்களிப்போடு 10 ஆயிரம் மரங்களை சென்னை முழுவதும் நட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மரம் நடுவது சுற்று சூழலை மேம்படுத்த உதவும். இது போன்ற திட்டங்களை அரசு மட்டும் செயல்படுத்தினால் போதாது. மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் ஒடிசா ரயில் விபத்தில் தகவல் கிடைக்காத எட்டு தமிழர்கள் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஒடிசா ரயில் விபத்தில் தகவல் தெரியாமல் இருந்த 8 பேர் பாதுகாப்பாக மிகவும் நலமுடன் உள்ளனர். 8 பேரில் 2 பேரிடம் பேசிவிட்டோம். 6 பேரிடம் பேச முடியவில்லை. மற்ற ஆறு பேர் பாதுகாப்பாக உள்ளனர் என்று உடன் பயணித்தவர்கள் சொல்லி உள்ளனர். அவர்கள் பயணம் செய்த பெட்டி எந்த பாதிப்பும் அடையவில்லை என்று தெரிந்துள்ளது. அந்த 6 பேரிடம் தெளிவாக பேச முடியவில்லை. இன்னும் 2 நாட்களில் 6 பேர் குறித்து ஆறுதலான தகவல் வரலாம் என உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
- பி.ஜேம்ஸ் லிசா