எஸ்ஜே சூரியா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பொம்மை’ படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகரும் இயக்குனருமான எஸ்ஜே சூரியா, நடிகர் அஜித் நடித்த வாலி படத்தை 1999-ம் ஆண்டு இயக்கி, தமிழ் சினி உலகில் அறிமுகமானார். நடிகர் விஜய்யை வைத்து குஷி படத்தையும் இயக்கினார். அதனை தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். பல படங்களில், கதாநாயகனாக வலம் வந்த எஸ்ஜே சூரியா, ஸ்பைடர், மெர்சல் மற்றும் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.
தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் தற்போது ‘பொம்மை’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா கதாநாயகனாகவும், ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக ’மான்ஸ்டர்’ படத்தில் எஸ்ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் ஜோடி இணைந்து நடித்துள்ள நிலையில், தற்போது ’பொம்மை’ படத்தில் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர். ஏஞ்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
ஏற்கனவே இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் உள்ள இந்த படம் வரும் 16-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இரண்டாவது டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.







