தனக்கு முதலமைச்சர் பதவி கொடுத்த சசிகலாவுக்கே நம்பிக்கை துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி என ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம், தன் சார்பில் புதியதாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருந்தார். யார் கூட்டணியில் இருப்பார்கள் என்று அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும். திமுக கவனம் செலுத்தாத நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்து வருகிறேன்” என்று கூறினார்.
ஆளுநரை திரும்பப் பெறவேண்டும் என திமுக கோரிக்கை குறித்து பதிலளித்த அவர், “ஆளுநர் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டுத்தான் செயல்படுகிறார். ஆளுநர் தேவையில்லை என்று சட்டத்தில் எதுவும் கூறவில்லை. ஆளுநர் அதிகாரத்தை மீறினார் என்று நிரூபிக்கப்படவில்லை” என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், “பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரை எதிர்த்து வாக்களித்து இருந்தேன். திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் என வேலுமணி, தங்கமணி என்னிடம் பேசினர். அதனால் தான் அவர்களுக்கு ஆதரவளித்தேன். நான் அளித்த ஆதரவால் அந்த ஆட்சி காப்பாற்றப்பட்டது. ஆனால் எனக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கவில்லை” என்றதோடு, கூவத்தூரில் சசிகலா தான் பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தார். அன்று காலில் விழுந்து பதவி வாங்கினார். ஆனால் அவருக்கும் நம்பிக்கை துரோகியாக இருந்தவர் பழனிசாமி என்றும் விமர்சித்தார்.






