முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி ராமச்சந்திரனின் 106வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சாலையில் உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணா சாலையில் 1990 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்த ஓபிஎஸ் இன்று காலை 10:30 மணி அளவில் வருகை தந்தார். அவரது ஆதரவாளர்கள் அண்ணாசாலையில் இரண்டு புறங்களிலும் அதிமுக கொடி மற்றும் பதாகைகளோடு ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்றனர்.
ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவு எம்எல்ஏக்களான வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், நடராஜன் மற்றும் ஜே சி டி பிரபாகரன் உள்ளிட்டோர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என தெரிவித்தார்.மேலும், பொதுக்குழு வழக்கு தொடர்பான தீர்ப்பு இறைவன் கையில் உள்ளது என கூறினார்.
ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், அதிமுக நிர்வாகி வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரும் வாதங்களை முன்வைத்த நிலையில் வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.







