கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி…

கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி கனமழையால், 14 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து துயரமும் மனவேதனையும் அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக ஆட்சி காலத்தில் நிவர் புயல் உருவாகி கனமழை ஏற்பட்ட சமயத்தில் உயிர்ச் சேதத்தை தடுக்க கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தபோதும் எதிர்பாராத விதமாக புயல் மற்றும் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். அவர்கள் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 4 லட்சம் ரூபாயும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 6 லட்சம் ரூபாயும் என மொத்தம்10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

தற்போது பெய்த அதிகனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ள தாகவும் அவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே, ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிமுக ஆட்சியில் பத்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளதால் 4 லட்சம் ரூபாய் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

ஏற்கனவே உயர்த்தி அறிவிக்கப்பட்டதை குறைத்து அறிவிப்பது இயற்கை நியதிக்கு முரணானது. அண்மையில் பெய்த கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்த பட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க வேண்டும் என்பது தான் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, முதலமைச்சர் இதில் தலையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வழங்க உத்தர விட வேண்டு மென்று அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.