வாரிசு, துணிவு திரைப்பட நள்ளிரவு சிறப்புக் காட்சிகளை அனுமதியின்றி வெளியிட்ட 34 திரையரங்குகளுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜயின் வாரிசு, அஜித் தின் துணிவு ஆகிய திரைப்படங்கள் 11, 12,13 மற்றும் 18 ஆகிய 4 நாட்களில் காலை 09.00 மணிக்கு ஒரு சிறப்பு காட்சி நடத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதனையடுத்து ஒரே நாளில் திரைக்கு வந்த, இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. வசூல் சாதனை செய்வதில் இந்த இரண்டு படங்களுக்கும் இடையில் தற்போது போட்டி நிலவி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து கடந்த 11ஆம் தேதியன்று நள்ளிரவு மற்றும் அதிகாலை 4 மணிக்கும் துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக கூறி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 திரையரங்குகளுக்கும் விளக்கம் கேட்டு மாவட்ட ஆட்சியர் நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
அதில் தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து இக்குறிப்பாணை கிடைத்த 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், தமிழ்நாடு திரையரங்கு ஒழுங்குமுறைச் சட்டம் 1957-ன்படி தங்களது திரையரங்கின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.