நிபா வைரஸ் பரவல் இல்லை – கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது கோழிக்கோடு நிர்வாகம்!

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல்…

கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருந்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் செப்.11-ம் தேதி மற்றொருவர் பலியானார். அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நிபா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, கோழிக்கோட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளை மூடவும், ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

கடந்த 10 நாட்களாக புதிதாக நிபா வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு – விஜயவாடா ஊழல் தடுப்பு பிரிவு நீதிமன்றம் உத்தரவு

மேலும் மாணவ, மாணவிகளும் பொதுமக்களும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடரவும் கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.