கோவாக்சின் அவசர கால பயன்பாட்டுக்கு வருமா? – இன்று முடிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,52,56,201 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,42,02,202…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,52,56,201 அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 3,42,02,202 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு தடுப்பூசிகளை மத்திய அரசு இலவசமாக செலுத்தி வருகிறது. இதில் கோவீஷீல்டு செலுத்திக்கொண்டவர்களுக்கு வெளிநாடுகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் கோவாக்சின் செலுத்திக்கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் நிலையில் குறிப்பிட்ட நாட்கள் வரை தங்களை தனிமைப்படுத்தக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த சூழலில் கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதியை உலக சுகாதார அமைப்பு இன்று வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த மேலதிக தகவல்களை ஐநாவின் தொழில்நுட்ப குழு பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்டுள்ளது.

இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த குழு 24 மணி நேரத்தில் அதாவது இன்று தனது அறிக்கையை ஐநாவிடம் சமர்ப்பிக்கும். இந்த அறிக்கையின் அடிப்படையில் ஐநாவின் உலக சுகாதார அமைப்பு கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதிக்கலாமா என்கிற முடிவினை எடுக்கும். ஒருவேளை அனுமதி வழங்கப்படுமாயின், கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி வெளிநாடுகளுக்கு பயணிக்கலாம்.

இந்த தடுப்பூசி தொற்றுக்கு எதிராக 77.8 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும், டெல்டா வெரியன்ட்க்கு எதிராக 65.2 சதவிகிதம் செயல்திறனை கொண்டுள்ளதாகவும் இதனை உருவாக்கிய பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று கோவாக்சின் குறித்து முடிவுகளை தொழில்நுட்ப பிரிவு ஐநாவுக்கு அனுப்பினாலும் நவ.3ம் தேதிதான் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் ஏறத்தாழ 10 கோடிக்கும் அதிகமானோர் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இதற்கான அனுமதி குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.