டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணியை வென்ற பாகிஸ்தான் அணிக்கு ஆதராக பதிவு வெளியிட்ட ஆசிரியை நீக்கப்பட்டுள்ளார்.
டி-20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் கடந்த 24 ஆம் தேதி மோதியது. இதில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அதிர்ச்சிக் கொடுத்தது. இதையடுத்து அந்த அணியின் செயல்பாட்டை இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி உட்பட பலர் பாராட்டினார்.
இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில், நீர்ஜா மோடி தனியார் பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை நபீசா அட்டாரி என்பவர், பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதை கொண்டாடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அவர் பதிவைக் கண்ட மாணவன் ஒருவனும் அவன் பெற்றோரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானை ஏன் ஆதரிக்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு ஆமாம், நான் பாகிஸ்தானை ஆதரிக்கிறேன் என்று அவர் பதிலளித்தார்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் அவர்கள் புகார் கூறினர். இதனால், அவரை பள்ளியில் இருந்து நிர்வாகம் நீக்கியுள்ளது. இதைக் குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நபீசா அட்டாரியா, மன்னிப்புக் கேட்டுள்ளார். அதில், எங்கள் வீட்டில் இரண்டு குழுவாக இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்த்தோம். இந்திய அணிக்கு ஒரு குழுவும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு குழுவும் ஆதரவு தெரிவித்தோம்.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும் நான், நாங்கள் வெற்றி பெற்றுவிட்டோம் என்று பதிவிட்டேன். இதற்கு பிறகு வந்த பின்னூட்டங்களை கண்ட பின் என் தவறை உணர்ந்து அந்தப் பதிவை நீக்கிவிட்டேன். இதன் மூலம் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாஜக அமைப்பினர் சிலர் அந்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பள்ளியின் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.









