இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் பகுதியில் உள்ள தங்க நகர், பி.மேட்டூர், வைரிசெட்டிபாளையம், எரகுடி வடக்கு மற்றும் ஆலத்துடையான்பட்டி ஆகிய கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
பல ஆயிரக்கணக்கான மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்துள்ளபோதும், நாளொன்றுக்கு ஆயிரம் மூட்டைகளை மட்டுமே கொள்முதல் செய்வதாக தெரிவித்துள்ள அவர், இதனால், விவசாயிகள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் பெய்த மழையால், பெரும்பாலான நெல் கொள்முதல் நிலையங்களில் குளம் போல மழைநீர் தேங்கியதாக குறிப்பிட்ட அவர், கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள் வீணாகிவிட்டதாக கூறியுள்ளார்.
பல விவசாயிகள் 20 நாட்களாக காத்திருக்கும் போதும், கொள்முதல் டோக்கன் சரிவர வழங்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, இடைத்தரகர்களை கட்டுப்படுத்தி, விரைவாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.







