பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற புதிய அமைச்சரவைக் கூட்டத்தில், வேளாண்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட பின்னர், கேபினட் அமைச்சர்களுடனான கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதையடுத்து, கேபினட் அமைச்சர்கள், தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர் என 77 அமைச்சர்கள் பங்கேற்ற மத்திய அமைச்சர்கள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
காணொலி வாயிலாக இதில் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார். அப்போது. புதிய அமைச்சர்கள் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார். ஒரு வாரத்தில் தொடங்கவுள்ள நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த, ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படாது என திட்டவட்டமாக கூறிய அவர், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சு நடத்த அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.
தென்னை விவசாயத்தை அதிகரிக்கவும், தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரவும் தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, தேங்காய் வாரியத்திற்கு விவசாய சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராக நியமிக்கப்படுவார் எனவும், ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாரியத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் எனவும் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.







