எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும்: நடிகை நயன்தாரா

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும் என நடிகை நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துள்ள ஜவான் படத்தில்…

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும் என நடிகை நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அட்லி இயக்கத்தில் ஷாருக் கான் நடித்துள்ள ஜவான் படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சென்னை சத்யபாமா கல்லூரியின் 35 ஆம் ஆண்டு விழாவில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதில் கல்லூரி வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கானது. நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த காலத்தில், நீங்கள் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும். நல்லவர்களுடன் சேர்ந்து இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆனால் கெட்டவர்களோடு நீங்கள் பழகினால், உங்கள் வாழ்க்கை வேறு மாதிரி சென்று விடும்.

கல்லூரி நாட்களில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது. படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் போது, சிறந்த நபராக திறமையானவராக இருக்க வேண்டும்.

எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும், மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும் எனவும் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் தினமும் உங்கள் பெற்றோருக்காக 10 நிமிடத்தை செலவிடுங்கள். அதில் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும் எனவும் நயன்தாரா மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.