இடைத்தேர்தலை நிறுத்தக்கூறி எந்த புகாரும் வரவில்லை என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். 46 வயதே ஆன திருமகன் ஈவேராவின் மறைவு தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்ளிட்ட 80 பேர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருப்பினும் ஈரோடு இடைத் தேர்தலில் 4 கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக வின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக வின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் சார்பில் சீமான் மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சி பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகவும், முறைகேடுகள் நடப்பதாகவும் அதிமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் முறைகேடு தொடர்பாக புகார் மனு ஒன்றை அளித்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளதாவது..
” ஈரோடு கிழக்கில் இதுவரை ரூ 61.70 இலட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பான காணொலிகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுவதால் சி – விஜில் செயலி மூலமாக புகார்களை அனுப்பலாம். சி – விஜில் செயலி மூலமாக ஒரே ஒரு புகார் மட்டுமே பெறப்பட்டுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அதுகுறித்து தெரிவிக்கப்பட்டது.
சி – விஜில் செயலி மூலமாக அனுப்பினால் அனுப்புபவரின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்படாது. ஈரோடு கிழக்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு சுமூகமான முறையில் உள்ளது.
பல புகார்கள் வந்தாலும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை நிறுத்தக் கூறி இதுவரை புகார் எதுவும் தலைமைத் தேர்தல் அலுவலரிடம் வரவில்லை. கொடுக்கப்படும் புகார்கள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறது. டெல்லி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட புகார்கள் குறித்தும் நடவடிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது” என சத்ய பிரத சாகு தெரிவித்தார்.
– யாழன்








