நாகையில், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக உண்ணாவிரப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நலப் பணியாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக ஆட்சிக் காலத்தில்,1989ம் ஆண்டு பணியமர்த்தப்பட்டு, அதிமுக ஆட்சிக்காலத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள், தற்பொழுது திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில், திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.
அதற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நாகை அவுரி திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த பேசி முடிக்கப்பட்டது. ஆனால், தங்களது கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டபடி, திருக்குவளையில் போராட்டம் நடத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2,000த்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள் : ”தமிழ்நாட்டு இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் உழைக்க முன்வரவேண்டும்” – விக்கிரமராஜா
இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பிறந்த இல்லம் முன்பாக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்கள் நலப் பணியாளர்களில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த பொற்கொடி, செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த செங்கனி, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால், உடனடியாக அவர்களை காவல்துறை வாகனத்தில் மருத்துவமனைக்கு ஏற்றிச் சென்றனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏடிஎஸ்பி சுகுமார் மற்றும் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், தடுப்புகள் அமைத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர்.







