என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக பாமக சார்பில் நாளை முற்றுகை போராட்டம் நடைபெறும் என அக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி,கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வளையமாதேவி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இதற்காக கனரக வாகனங்கள், ஜேசிபி எந்திரங்கள் உதவியுடன் என்எல்சி நிர்வாகம் நிலங்களை சமன்படுத்தும் பணிகளை நேற்று மீண்டும் தொடங்கியதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனிடையே போலீசாரின் துணையுடன் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் வளையமாதேவி கிராமத்தில் மேற்கொள்ளப்படுவதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. வளையமாதேவி கிராமத்திற்குள் செல்ல முயன்ற அக்கட்சியினர் தடுத்து நிறுத்தப்பட்டதால், சேத்தியாதோப்பில் மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
இதனை தொடர்ந்து, வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களை சுற்றி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், போராட்ட நோக்கில் வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக் தெரிவித்தார்.
இந்த நிலையில், 2-வது நாளாக இன்றும் விளைநிலங்களை கையகப்படுத்தும் என்எல்சி நிறுவனம், விவசாயிகள், பொதுமக்களின் கடும் எதிர்ப்புகளை மீறியும் கால்வாய் வெட்டும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த கால்வாய் வெட்டும் பணியால் வளையமாதேவி கிராமத்தின் பக்கத்தில் உள்ள கரிவெட்டி மக்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் எங்கள் கிராமத்தில் இருந்து வெளிவர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், என்எல்சி விவகாரம் தொடர்பாக சென்னையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
என்.எல்.சி. விவகாரத்தில் பாமக 40 ஆண்டுகளாக போராடி வருகிறது. பாமக எப்போதும் விவசாயிகள் பக்கமும், தமிழ்நாட்டு மக்கள் பக்கமும் தான் நிற்கும். நடப்பு ஆண்டில் உணவுப் பற்றாக்குறை இருக்கும் என ஐநா சபை கூறுகிறது. விளைநிலங்களை அழித்தால் வருங்காலத்தில் சோறு கிடைக்காது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வேறு கண்ணோட்டத்தில் இருந்தோம். நமது தேவையை பூர்த்தி செய்து விட்ட பிறகு, என்.எல்.சி. அளிக்கும் 800 மெகாவாட் மின்சாரத்திற்காக விளை நிலங்களை கொடுக்க வேண்டுமா?
எடப்பாடி பழனிசாமி சொல்வது போன்று நல்ல விலை, வேலையை கொடுத்தால் சரியாகிவிடுமா?. எடப்பாடி பழனிசாமி தனது நிலத்தை நல்ல விலைக்கு கேட்டால் கொடுப்பாரா?. நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கொடுத்தாலும் தமிழத்திற்கு அது தேவை இல்லை. 1989-க்குப் பிறகு என்.எல்.சி. நிறுவனம் வேலையே கொடுக்கவில்லை. என்.எல்.சி.யை தனியாரிடம் விற்கப்போவதாக அறிவித்த பிறகும், தமிழ்நாடு அரசு ஏன் சாதகமாக செயல்படுகிறது? என்பது புரியவில்லை.
எனக்கு மொழி அடையாளம், ஊர் அடையாளம் உள்ளது. கடலூர் மாவட்டத்தை அழிக்க நினைப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. கதிர் வந்த நெல்லை அழிப்பது கருவை அழிப்பதற்கு சமம். என்.எல்.சி. தொடர்பாக அடிப்படை புரிதல் கட்சிகளுக்கு இல்லை. எல்லா கட்சிகளுக்கும் புரிதல் என்பது வேண்டும். காவிரி டெல்டா பகுதியிலே தான் என்.எல்.சி. விரிவாக்கம் செய்கின்றனர். விவசாயிகள் தொடர்ந்து போராட வேண்டும். மாநில அரசும், மத்திய அரசும் திட்டத்தைக் கைவிட வேண்டும்.
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தனது நிலத்திற்கு பணம் கொடுத்தால் கொடுத்து விடுவாரா?. நாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு பிடி மண்ணைக் கூட என்.எல்.சி.க்கு கொடுத்திருக்க மாட்டோம். விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து நாளை என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளோம். என்எல்சி வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நாளை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச் கேட் பகுதியில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணியுடன் நமது சென்னை மண்டல தலைமைச் செய்தியாளர் சிரில் தேவா நடத்திய கலந்துரையாடலின் காணொலி:
- பி.ஜேம்ஸ் லிசா










