2025 ஆம் ஆண்டு நடைபெற்ற பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானுக்கு தொடர்புடையதாக கூறப்படும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக சிந்து நதிர்நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. இந்தியாவில் உற்பத்தியாகும் சிந்து நதிநீர் பாகிஸ்தானின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாகும்.
பாகிஸ்தான் தனது பயங்கரவாதத்திற்கான ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தொடர முடியாது என்று இந்தியா அறுவித்துள்ளது. அதே சமயம் சிந்து நதிநீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.
பாகிஸ்தான் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் “எங்கள் நாட்டுக்கான நதிநீர் விநியோகத்தை அண்டை நாட்டின் பிரதமர் (மோடி) தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட விடமாட்டேன் என்று அவர் கூறுகிறார்” என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அத்தாவுல்லா தரார் “1960-ல் உலக வங்கியின் மத்தியஸ்தத்துடன் கையெழுத்தான இந்த ஒப்பந்தம் சர்வதேச சட்டங்களின்படி இன்னும் செல்லுபடியில்தான் உள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ இந்தியா எடுத்த தன்னிச்சையான முடிவிற்கு சர்வதேச அரங்கில் எந்தவொரு ஆதரவும் கிடைக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சிந்து நதிநீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியதாவது:
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு மாறாதது. பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்து வருவதால், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கான தனது ஆதரவை நம்பகத்தன்மையுடனும் மாற்ற முடியாத வகையிலும் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.




