ஹீரோ முதல் வில்லன் வரை 11 வேடங்களில் நடிக்கும் யோகி பாபு….!

நடிகர் யோகிபாபு புதிய திரைப்படம் ஒன்றில் 11 வேடங்களை ஏற்று நடித்து வருகிறார்

நகைச்சுவை நடிகரான யோகிபாபு ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் புதிய திரைப்படம் ஒன்றில் 11 வேடங்களை ஏற்று நடித்து வருகிறார். 9 லைட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் முத்து தயாரிக்கும் இப்படத்தை ஆர். கிஷோர் குமார் இயக்குகிறார். அறிமுக இயக்குநரான கிஷோர் குமார், இயக்குநர் மோகன் ராஜாவிடம் இணை இயக்குநராக பணியாற்றிவர் ஆவார்.

மலையாள நடிகை அதிதி ரவி நாயகியாக நடிக்கும் இப்படத்தில், ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், பஞ்சு சுப்பு, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் கிஷோர் குமார் கூறியுள்ளதாவது: பரபரப்பான காமெடி ஆக்ஷன் திரில்லரான இப்படத்தில் நாயகன் முதல் வில்லன் வரை மொத்தம் 11 பாத்திரங்களை ஏற்று யோகி பாபு நடிக்கிறார். இதில் இரட்டையர் வேடங்களும் அடங்கும். இது மட்டுமில்லாது, பல்வேறு மொழிகளை பேசியும் நடிக்கிறார். மிகவும் சவாலான இப்பணிக்காக கடும் உழைப்பை அவர் வழங்கி வருகிறார்.

ஒரு ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குகிறது, அதன் பிளாக் பாக்ஸை தேடும் பயணம் தான் இந்த திரைப்படத்தின் கதை. விபத்தின் காரணத்தை கண்டறிய செல்லும் நாயகன் எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை, ஆக்ஷன் கலந்து மிகவும் விறுவிறுப்பாக கூறவுள்ளோம். என்று அவர் கூறினார்.

யோகி பாபு 11 வேடங்களில் நடிக்கும் இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இங்கிலாந்து, கென்யா ஆகிய நாடுகளில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடர்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.