அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது. தொடர்ந்து நிரந்தர அமைதி உடன்படிக்கை குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஈரானின் பொருளாதாரம் கடுமையாகப் பலவீனமடைந்துள்ளதாகவும் ஈரானுக்கு 300 சதவிகித பணவீக்கம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், ஈரானுக்கு உணவுத் தேவை இருப்பதாகவும் அதற்கான பொருட்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்கா விரும்புவதாகவும் கூறினார்.
டிரம்பின் இந்த கருத்திற்கு ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உங்கள் சொந்த குடிமக்களில் நாற்பது மில்லியனுக்கும் அதிகமானோர் உணவு மானியத் திட்டத்தில் இருக்கும்போது, மற்றொரு தேசம் பசியால் வாடுகிறது என்று சொல்வதை கற்பனை செய்து பாருங்கள். இது ஒரு பிரகடனம் அல்ல. இது ஒரு கணிப்பு. உங்கள் SNAP ஆலோசனையை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். எங்கள் சொத்துக்கள், எங்கள் தேர்வுகள். உங்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு விகிதங்களில் கவனம் செலுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.




