திருப்பூர் அருகே பாஸ்கரனாந்தா என்பவரின் ஆசிரமத்தை, நித்யானந்தா இடம் என நினைத்து மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்திற்கு சொகுசுக்காரில் சாமியார் ஒருவர் வந்து இறங்கினார். பார்ப்பதற்கு நித்யானந்தா சுவாமிகள் போல் தோற்றமளித்த அவரது பெயர் பாஸ்கரானந்தா. கோவை செல்வபுரத்தைப் சேர்ந்த இவர் தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆன்மீக பணி மேற்கொண்டு வருகிறார்..
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரணம்பேட்டை அருகே செல்வகுமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் ஆசிரமம் அமைக்க சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை அட்வான்சாக கொடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார். இதனிடையே கடந்த வாரம் அந்த இடத்தில் பாஸ்கரானந்தா அறையில் இருந்து 25 பவுன் தங்க நகைகள் திருடுபோய் உள்ளது.
மேலும் ஆஸ்ரமம் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுப்பதற்காக வந்தார். ஆசிரமத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார். புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கரானந்தா, தான் நித்தியானந்தா போல இருப்பதால் தன் ஆசிரமம் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம். எனவே, காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தான் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் தெரிவித்தார். நித்தியானந்தா போன்று தோற்றம் கொண்ட அவர் திடீரென காவல்நிலையம் வந்து இறங்கியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-இரா.நம்பிராஜன்