நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கிய நிலையில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். இதையொட்டி நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பருவநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றி சுட்டிக்காட்டப்பட்டன.
இதனிடையே குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஞாயிறு காலை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில், தொழில் துறையினருக்கான சலுகைகள் மற்றும் பல்வேறு தரப்பினருக்கான புதிய திட்ட அறிவிப்புகளும் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.







