மத்திய பட்ஜெட்: 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் ….நிர்மலா சீதாராமன்!

பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2026 – 27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார். முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசினார். அப்போது, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பை ஊட்டி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், “புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் இந்த பட்ஜெட்டை நான் தாக்கல் செய்கிறேன். தடைகளைத் தாண்டி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். அதன் பலனாக கடந்த காலங்களில் நாட்டின் வளர்ச்சிக்காகவும், நிதி மேம்பாட்டிற்காகவும், தொடர்ச்சியாக உழைத்து வந்தோம். குறிப்பாக தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். பண வீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதன் காரணமாக நாட்டின் வளர்ச்சி மேம்பட்டு உள்ளது.

புதிய தொழில்நுட்பங்கள் உற்பத்தி துறையை பல மடங்கு அதிகரித்துள்ளது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும். இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு எடுக்கும். இந்த தருணத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் இந்திய நாட்டு மக்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக செயல்படுவோம். வளர்ச்சியின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்து இருக்கிறோம்.

அனைவருக்குமான இணைந்த வளர்ச்சி, நிலையான பொருளாதாரம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல் ஆகிய மூன்றின் அடிப்படையில் பட்ஜெட். பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறோம். குறிப்பாக ஜி.எஸ்.டி சீர்திருத்தம், லேபர் கோட் சீர்திருத்தம் என பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு இருக்கிறோம். வேலைவாய்ப்பு வளர்ச்சியை ஊக்குவிப்பது உள்ளிட்டவத்திற்காக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம். பல்வேறு சீர்திருத்தங்கள் ஏற்படுத்தியதன் காரணமாக நம்முடைய வளர்ச்சி ஏழு சதவீதம் என்ற அளவிலே தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.