சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த விவகாரம் குறித்து அனைத்து அரசியல் தலைவர்களும் பேசி வருகிறார்கள். உண்மையில் அந்த ஆட்சியரை அழைத்து நடந்ததற்காக மன்னிப்புக் கேட்ட அமைச்சர்களே, இன்று சமூக வலைதளங்களில் வந்த செய்திக்கு கேள்வி கேட்க முடியுமா? என எங்களை நோக்கிக் கேள்வி எழுப்புகின்றனர். அதே சமயம், நடந்ததை வெளியே சொல்ல வேண்டாம் என்ற அழுத்தத்தைக் கொடுப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆட்சியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும்; விசாரணை நியாயமாக நடைபெற வேண்டும் என்றார்.
காவல் நிலையத்திற்குள் தவெக அமைச்சர் காந்திராஜ் ஆய்வு மேற்கொண்டது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் இது மிகப்பெரிய சட்ட மீறல், தொடர்ந்து இந்த ஆட்சியில் சட்ட மீறல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இப்போது காவல் நிலையத்துக்குள்ளேயே குற்றச் செயல்களைச் செய்கின்றனர். பெண் காவலரின் மொபைலை வாங்குவதெல்லாம் அத்துமீறல்” என்றார்
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வில் முதலமைச்சருக்கு அரோகரா எனக் கோஷம் எழுப்பியது குறித்த கேள்விக்கு, “பல கோயில்களை கட்டிய சோழ அரசர்கள்கூட தங்களை கடவுள்களாக நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் தங்களை போற்றிப் பாட வேண்டும் என நினைத்தது கிடையாது; அதைத்தாண்டி, கடவுள் இல்லை என்று சொன்ன கருணாநிதியின் ஆட்சியில்கூட, இப்படி கடவுளுக்கு நிகராக யாரையும் போற்றியது கிடையாது; இது நிச்சயமாக கடவுள் மீது பக்தி உள்ள அனைவரின் மனதையும் புண்படுத்தக்கூடிய ஒன்று” என்று பதிலளித்தார்.
மேலும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் கருத்து தெரிவிக்கவில்லை என்கிறீர்கள். அவர் எதற்குக் கருத்து தெரிவித்துள்ளார்? என்று தயவுசெய்து சொல்லுங்கள். ஆனால், எங்களைப் பார்த்து, கருத்து தெரிவிக்கவில்லை என தவெக அமைச்சர்கள் கேட்பார்கள், அவர்களிடம் ஒன்றைக் கேட்கிறேன், எதற்குமே கருத்து தெரிவிக்காத ஒரு முதலமைச்சர் எப்படி இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.




