கோவை கார் சிலிண்டர் வெடிப்பு – முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த என்ஐஏ

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்துள்ளது. கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.…

கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் முதல் தகவல் அறிக்கையை என்ஐஏ பதிவு செய்துள்ளது.

கோவையில் கடந்த 23ஆம் தேதி நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டம் போடப்பட்டுள்ள நிலையில், ஐந்து பேரையும் போலீசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த முபினின் பெரியப்பா மகன் அப்சர் கானை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த முபீனுக்கு ஆன்லைனில் பொட்டாசியம், சல்பர் உள்ளிட்ட வேதிப்பொருட்களை அப்சர் கான் பெற்று கொடுத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, கோவை மற்றும் கேரளாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆன்லைனில் வேதிப்பொருட்களை வாங்கியவர்கள் குறித்த தரவுகளை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும், அப்சர் கானின் வீட்டில் இருந்த லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே கார் வெடி விபத்து தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது. இதனை ஏற்ற மத்திய அரசு விபத்து குறித்து என்ஐஏ விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கோவையில் முகாமிட்டுள்ள என்ஐஏ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.