உளவுத்துறை வேலையே பார்ப்பதில்லை என்றும், கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உளவுத்துறையின் தோல்வி என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ்
வழங்கப்பட்ட மனுக்கள், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக கொறடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, ”இந்த ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியே பாதிதான் வந்துள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த ஆட்சியில்
ஆரம்பித்த பணிகளை விரைந்து செய்ய வேண்டும், கோவை மாவட்டத்தில் உள்ள
பழுதடைந்த அனைத்து சாலைகளையும் செப்பனிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முக்கியமாக சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ளோம்.

கோவை மாவட்டத்தில் மோசமான சூழ்நிலை இருக்கிறது. மீண்டும் 1998 போல ஒரு சூழல் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்கள். அதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொண்டுள்ளோம். 1998 சம்பவத்திற்கு பிறகு இருபது வருட வளர்ச்சியில் பின்னோக்கி சென்று விட்டோம். இப்பொழுதுதான் ஓரளவு சரியாகி வருகிறது. தற்போதுள்ள அரசு குறிப்பாக முதல்வர், உளவுத்துறை ஐஜி டேவிட்சன் எந்த வேலையும் பார்ப்பதில்லை. இந்த சம்பவம் உளவுத்துறையின் தோல்வி. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது மக்களை அச்சுறுத்தும் பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டேவிட்சன், முதல்வர் செல்லும் இடங்களுக்கு நேர்முக உதவியாளர் போல் சென்று வருகிறார். சில அதிகாரிகள் எதிர்கட்சியை பழிவாங்கும் நடவடிக்கையில்தான் ஈடுபடுகிறார்கள். காவல்துறையில் உள்ள அதிகாரிகளையெல்லாம் தூக்கி விஜிலென்சில் போடுகிறார்கள். இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல் மற்ற அமைச்சர்கள் வரை எப்படி பொய் வழக்கு போடுவது என்ற வேலையைத்தான் பார்க்கிறார்கள் எனவும் கஞ்சா விற்பனையை தடுப்பதில்லை எனவும் விமர்சித்தார்.
கோவை மாவட்டத்தில் இவ்வளவு பெரிய பிரச்னை ஆகிறதென்றால் ஆரம்பத்திலேயே
உளவுத்துறை முழுமையாக தடுத்திருக்க வேண்டும். இனியாவது விழித்துக்கொண்டு கோவை மாவட்டத்தில் உள்ள மக்களை பாதுகாக்க வேண்டும். கோவையில் எப்போதும் மதப்பிரச்சனை இல்லை. அனைவரும் சகோதரர்களாக உள்ளனர். யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுங்கள். எந்த மத்ததையும் ஒதுக்க கூடாது, தவறு செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுங்கள்.
அரசியலுக்காவோ, தேர்தலுக்காகவோ யோசிக்க வேண்டாம். கோவை மாவட்டத்தில் நாங்கள் அமைதியை விரும்புகிறோம். உளவுத்துறை ஐ.ஜி, முதல்வருக்கும் அவரது குடும்பத்திற்கும் பணம் வசூல் செய்யும் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறார். உளவுத்துறை, வேலையே பார்ப்பதில்லை. காவல்துறை தயவு செய்து மக்களை காப்பாற்றும் பணியை செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.







