கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவியின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிற செய்தியறிந்து பெரும் மனத் துயரமடைந்தேன்.
ஆற்றமுடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் அவர்தம் பெற்றோருக்கு எனது ஆறுதலைத் தெரிவித்து, அவர்களது துயரில் பங்கெடுக்கிறேன். கடந்த பத்தாண்டுகளில் இதேபோன்று நிறைய மாணவிகள் அப்பள்ளியில் இறந்துபோயிருப்பதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் செய்திகள் பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன.
மாணவர்களின் எதிர்கால நலவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டிய கல்விக்கூடங்களே, அவர்களது உயிரைக் காவு வாங்குவது எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும். மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி விசாரணை செய்து, பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அதில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
கனியாமூர் தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி +2 படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த நிலையில் திடீரென அவர் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோர்களிடம் கூறி உள்ளது. இதையடுத்து, அந்த மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.