நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி : திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே…

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பருவமழை பொய்த்துப் போனதால் விவசாயம் முறையாக நடைபெறவில்லை. ஏற்கனவே விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு, ஆட்கள் பற்றாக்குறை என பல வகைகளில் விவசாயிகள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே தனியார் வியாபாரிகள் மிக குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை வாங்குவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடவு செய்யப்பட்ட நெல் ரகங்களான அம்பை-16, ஆடுதுறை-45, டி.பி.எஸ்-5 உள்ளிட்டவற்றின் அறுவடைப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பருவமழை பொய்த்துப் போனதால் நெல் மகசூல் மிக குறைவாகவே உள்ளது. மேலும் நெல் அறுவடை இயந்திரத்தின் ஒரு மணி நேர வாடகையானது 2,800 ரூபாயிலிருந்து 3,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : பிரதமர் வேட்பாளர் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறக் காரணம் என்ன?

இவ்வாறு இப்பகுதி விவசாயிகள் நெல்லிற்கு உரிய விலை கிடைக்க தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்த செய்தியானது கடந்த 15ம் தேதி, நியூஸ்7  தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் திருக்குறுங்குடியில் இன்று தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இங்கு 100 கிலோ பெரிய ரக நெல் ரூ.2,115-க்கும், சிறிய ரக நெல் ரூ.2,160-க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் அதற்கான அரசின் ஊக்கத்தொகையும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து 20 சதவிகிதம் ஈரப்பதம் உடைய நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.