திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இடத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர், இருவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு…

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இடத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர், இருவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் சிறுமலை வனப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கர் அளவிலான நிலத்தை நெல்லூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ராஜாக்கண்ணு ஆகிய இருவரிடம் விற்பனை செய்துள்ளார். நிலத்தை வாங்கிய அவர்கள், நிலத்தின் அளவு குறைவாக இருப்பதாக கூறி, தனபாலிடம் குறைவாக உள்ள இடத்திற்கு உரிய பணத்தை திருப்பித் தருமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மூவருக்கும் இடையேயான வாக்குவாதம் முற்றவே, தனபால் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால், ராஜாக்கண்ணு மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் சுட்டார். இதில் கருப்பையாவின் வயிறு மற்றும் தொடைப் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. கருப்பையாவை காப்பாற்ற முயன்ற ராஜாக்கண்ணுவிற்கும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

இதையும் படியுங்கள் : இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழ்நாட்டின் இடைத்தேர்தல்கள்! 

இதையடுத்து படுகாயமடைந்த இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரையும் துப்பாக்கியால் சுட்ட தனபால் தலைமறைவான நிலையில், அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

– வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.