நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக இறந்த தந்தை உடலை வீட்டில் வைத்துவிட்டு
12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய மாணவியின் மேற்படிப்புக்கான கல்விச் செலவை
முழுவதையும் ஏற்பதாக பரமக்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் அறிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜ பட்டினத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்
என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது ஒரே மகள் சுரேகா பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். தந்தை உயிரிழந்த நிலையில், உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மாணவி சுரேகா சோகத்துடன் பள்ளிக்கு வந்து பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதினார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக பொதுத் தேர்வு எழுத வந்த மாணவி சுரேகா குறித்து கடந்த மாதம் 17ஆம் தேதி நியூஸ் 7 தமிழ் வாயிலாக செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில், மாணவி சுரேகா பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் குடும்ப வறுமை காரணமாக மேற்ப்படிப்பு படிக்க முடியாமல் தவித்து வந்தார்.
மாணவி சுரேகாவின் வறுமை நிலையை நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி மூலம் அறிந்த
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் மேற்படிப்புக்கான கல்விச் செலவு
முழுவதையும் ஏற்பதாக உறுதியளித்தார். பின் ராமநாதபுரம் மாவட்ட கழகம் காதர்பாட்சா முத்துராமலிங்கம் சார்பாக பத்தாயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட மாணவி சுரேகா மிகுந்த மகிழ்ச்சியுடன் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்தார்.








