“பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல…” சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய இந்த பஞ்ச் டயலாக் போல் ஒரு காலத்தில் சினிமா உலகையே அதிரவைத்த பெயர்தான் “சின்னவர்”. எளிமையானதாக, தன்னடக்கமானதாக தோன்றும் இந்த நாமகரணம்தான் அது உச்சரிக்கப்பட்டமாத்திரத்திலேயே தமிழ் திரையுலகில் பல பஞ்சாயத்துக்களை தீர்த்து வைத்தது. அந்த பெயரோடு கலந்திருந்த பயம் கலந்த மரியாதைதான் பலருக்கு பாதுகாப்பாக அமைந்தது. எம்.ஜி.ஆர் என்கிற மூன்றெழுத்து மந்திரத்தின் ஐந்து எழுத்து அடைமொழிதான் இந்த “சின்னவர்”.
புரட்சி நடிகர், மக்கள் திலகம், புரட்சி தலைவர் என பொதுவாழ்க்கையில் எம்.ஜி.ஆர் எத்தனை விஸ்வரூபங்கள் எடுத்தாலும் அவர் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் திரையுலகினரிடையே எப்போதும் சின்னவர் என்றே செல்லமாக அழைக்கப்பட்டார். சின்னவர் வருகிறார் என்றால் படபிடிப்புத்தளம் படபடக்கும். அதுவரை அரட்டைக் கச்சேரிகள் நடந்த படப்பிடிப்பு தளம் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாகிவிடும். சின்னவர் வரப்போகிறார் என்கிற பரபரப்பு, சலசலப்புகளை அடக்கிவிடும். சின்னவர் உள்ளே நுழையும்போது அனைவரும் எழுந்து நின்று வணங்கி மரியாதை செலுத்துவர். சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களாக இருந்தாலும், இயக்குநர்களாக இருந்தாலும் தங்களின் சின்னவருக்கு சிறப்பான மரியாதையை கொடுத்துவிட்டுதான் அடுத்த வேலையை தொடங்குவர்.
அதென்ன சின்னவர்… சினிமாவின் பெரியவரான எம்.ஜி.ஆர் சின்னவர் என அழைக்கப்பட்டது ஏன்?
கலை உலகில் எம்.ஜி,ஆரும், அவரது அண்ணன் எம்.ஜி.சக்ரபாணியும் இணைந்தே பயணித்தனர். பாய்ஸ் கம்பெனியில் நாடக பயிற்சியை இருவரும் இணைந்தே பெற்றனர். நாடக கம்பெனிகளில் நடித்த போது சக கலைஞர்கள், எம்.ஜி,சக்கரபாணியை பெரியவர் என்றும் அவரது தம்பியான எம்.ஜி.ஆரை சின்னவர் என்றும் அழைக்க பின்னர் திரையுலகில் அடியெடுத்தபோதும் அவ்வாறே அழைக்கப்பட்டனர். எம்.ஜி.ஆரைவிட வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் சரி, இளையவர்களாக இருந்தாலும் சரி அவரை சின்னவர் என்றே அழைத்தனர். முன்னாள் முதலமைச்சரும், முத்தமிழ் அறிஞருமான கருணாநிதியும்கூட எம்.ஜி,ஆரை சின்னவர் என செல்லமாக அழைத்ததுண்டு.
இப்படி செல்வாக்கும், சொல்வாக்கும் மிக்க ”சின்னவர்” என்கிற அடைமொழி, எம்.ஜி.ஆருக்கு பின்னர், அவரைப் போன்று ஒரே நேரத்தில் திரையுலகிலும், அரசியலிலும் பயணித்துக்கொண்டிருக்கும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பெயருக்கு முன்னாள் தற்போது ஒட்டிக்கொண்டுள்ளது. எம்.ஜி.ஆரைப்போலவே எம்.எல்.ஏவாக இருந்துகொண்டு திரைப்படங்களில் உதயநிதி நடித்துவருவது இருவருக்கும் இடையேயான இன்னொரு ஒற்றுமை.
அரசியலில் ஒரு தலைவரின் அடைமொழி என்பது வெறும் வார்த்தையோ வாய்ஜாலமோ அல்ல. அவர் அடைந்த வளர்ச்சியின் அடையாளம். புரட்சி நடிகர், புரட்சித்தலைவர் ஆகித்தான் 10 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்நாட்டை ஆண்டார். தளபதியாக இருந்த மு.க.ஸ்டாலின் தலைவர் ஆகி முதலமைச்சராக உருவெடுப்பதற்கு முன்பு படிப்படியாக எத்தனையோ வளர்ச்சிக்களை கடந்து வந்துள்ளார். உதய் அண்ணாவாக இருந்து தற்போது சின்னவர் ஆனது வரை உதயநிதி ஸ்டாலினின் அடைமொழிகள், அரசியலில் அவரது வளர்ச்சி மற்றும் எழுச்சியின் அடையாளங்களாகவே பார்க்கப்படுகிறது.
தான் உண்டு தனது சேப்பாக்கம் தொகுதியின் பணிகள் உண்டு, என உதயநிதி ஸ்டாலின் ஒதுங்கிப்போனாலும், அவரை திமுவினர் விடுவதாக இல்லை. அமைச்சர், துணை முதலமைச்சர் என அடுத்தடுத்தகட்டங்களுக்கு அவரை கொண்டு செல்ல ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதன்வெளிப்பாடாக மூன்றாம் கலைஞர், இளைய தலைவர், சின்னவர் என உதயநிதிக்கு அடைமொழிகளால் அர்ச்சனை செய்து வருகின்றனர். சமீபத்தில் சட்டப்பேரவையில் நடந்த மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர்கள், உதயநிதி ஸ்டாலின் புகழ்பாடியது திமுகவின் எதிர்காலம் அவர் என்பதை சுட்டிக்காட்டியது. ”வில்லேந்தி எத்தனைபேர் களத்தில் நின்றாலும், இனிமையான சொல்லேந்தி வென்று வரும் எங்கள் சின்னவரே“ என ரைமிங்காக பேசினார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
தனக்கு வழங்கப்பட்ட மற்ற அடைமொழிகளை உதயநிதி விரும்பாவிட்டாலும் சின்னவரே என்று அழைப்பதற்கு அனுமதியே கொடுத்துவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் உசிலங்குளத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய உதயநிதி, இரண்டாம் கலைஞர், இளைய தலைவர் என தம்மை தொண்டர்கள் அழைப்பதை துளியும் விரும்பவில்லை எனத் தெரிவித்தார். அதேநேரம் சின்னவர் என்று வேண்டுமானால் கூப்பிட்டுக்கொள்ளுங்கள் என்று அனுமதி கொடுத்த அவர், திமுகவில் பெரியவர்கள் செய்த உழைப்போடு ஒப்பிட்டு பார்க்கையில் தனது பணி சின்னததான் என்பதால் “சின்னவர்” என தான் அழைக்கப்படுவதில் மகிழ்ச்சிதான் என்று தெரிவித்தார். தன்னை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் அடைமொழிகளிலிருந்து தப்பிக்க இவ்வாறு தன்னடக்கத்தோடு உதயநிதி ஸ்டாலின் கூறினாலும், “சின்னவர்“ என்கிற அடைமொழி உச்சரிக்கப்படும்போது எம்.ஜி.ஆர் என்கிற பெரியவரின் உருவமும் நினைவில் வந்து செல்கிறது.







