நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு இயக்க முன்னெடுப்பு முயற்சிக்கு மற்றொரு வெற்றி கிடைத்துள்ளது. பள்ளி, கல்லூரியை தொடர்ந்து தற்போது தனியார் நிறுவனம் ஒன்று பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலத்தில் மூன்று நாள் சிறப்பு விடுமுறை அறிவித்திருக்கிறது.
பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நியூஸ் 7 தமிழ் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் எஸ்.எம்.எஸ்.ஆர்.ரத்தினசாமி நாடார் குழுமத்தின், ரத்தினம் ஆட்டோ மொபைல்-ஸ் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பாலின சமத்துவ உறுதிமொழியை ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர். இதைத்தொடர்ந்து மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு இயக்கத்தில் ரத்தினம் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராதிகா வினுபாலன் கையெழுத்திட்டார்.
அதைத்தொடர்ந்து பேசிய நிர்வாக இயக்குநர் ராதிகா வினுபாலன், நிகரென கொள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டதோடு, மாதவிடாய் காலத்தில் பெண் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 3 நாள் விடுமுறை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலங்களில் 3-நாள் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசை கேட்டுக்கொண்டார்.
ஏற்கனவே, காஞ்சிபுரம் மாவட்டம் ஆர்ப்பாக்கம் காஞ்சி ஸ்ரீ மகாலட்சுமி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, மற்றும் உத்திரமேரூர் அடுத்த குப்பையநல்லூர் லயோலா மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய காலங்களில் 3 நாள் விடுமுறை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா









