நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” விழிப்புணர்வு: மாணவர்கள், ஆசிரியர்கள் உறுதிமொழியேற்பு!

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில், சென்னை, கரூர், கடலுர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு…

நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்” பாலின சமத்துவ முன்னெடுப்பு நிகழ்ச்சியில், சென்னை, கரூர், கடலுர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்கள் கலந்து கொண்டு பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கும் நியூஸ் 7 தமிழ், இது தொடர்பாக மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது.

வீட்டிலும், சமுதாயத்திலும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்றி பள்ளிக், கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நியூஸ்7 தமிழ் நிகரென கொள் என்ற இந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை முன்னெடுத்துள்ளது.

இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மற்றும் எழுத்தாளரும், சமூக செயல்பாட்டாளருமான கீதா இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாகசெம்மல் முன்னிலையில் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

கரூர் ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

இந்த நிலையில், கரூர் ஜெயராம்ஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நியூஸ் 7 தமிழின் “நிகரென கொள்வோம்” என்ற பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்பு மற்றும் மாதவிடாய் விடுமுறை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஸ்டீபன் ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி மற்றும் கையெழுத்திட்டனர். இதில் பேசிய மாணவிகள் பாலின சமத்துவத்தை வலியுறுத்தி நியூஸ்7 முன்னெடுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்தனர்.

காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று இறை வணக்க கூட்டம் நடைபெற்றது. அதில் நியூஸ் 7 சார்பில் நடைபெற்ற பாலின சமத்துவத்திற்கான நிகரென கொள் உறுதிமொழி மற்றும் மாதவிடாய் விடுமுறை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாலின சமத்துவம் பற்றிய விழிப்புணர்வு உறையை ஆற்றினார். அதனைத்தொடர்ந்து 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்றனர். பின்னர் நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்ட ஆசிரியர்கள் ,உதவி ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் ஆர்வமுடன் கையெழுத்து இட்டனர்.

சிட்லப்பாக்கம் லயோலா மேல்நிலைப்பள்ளி

தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் உள்ள லயோலா மேல்நிலைப்பள்ளியில் நியூஸ் 7 தமிழ் சார்பில் “நிகரென கொள்வோம்” என்ற உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர். இதில் பள்ளியின் தாளாளர் லயன் பிரேம் குமார் உறுதிமொழியை வாசிக்க, சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டு பாலின பாகுபாடுக்கு எதிராக சமத்துவத்தை வலியுறுத்தி , பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளுக்கு முழக்கமிட்டும், பெண்களை ஆணுக்கு நிகரென கொள்வோம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.இந்த முயற்சியை முன்னெடுத்த நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பள்ளியின் தாளாளர் லயன் பிரேம்குமார் வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் தெரிவித்தார்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை – யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரி

மேலும் கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பாலின சமத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில், கல்லுரி மேலாளர் மற்றும் தாளாளர் அனுசியா முன்னிலையில் 600-க்கும் மேற்பட்டோர் மாணவர்கள் பாலின சமத்துவ உறுதி மொழியை ஏற்று கொண்டனர். தொடர்ந்து மாதவிடாய் கையெழுத்து இயக்கத்திலும் பங்கேற்று கையெழுத்திட்டனர்.

நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி

தென்காசி மாவட்டம் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள்வோம் என்ற பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் உறுதி மொழி நிகழ்வை தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதை தொடர்ந்து பெண்களுக்கான மாதவிடாய் கையெழுத்து இயக்கத்தை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் தொடங்கி வைத்து நியூஸ்-7 தமிழ் முன்னெடுக்கும் பாலின சமத்துவ நிகழ்விற்கு பள்ளியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கையெழுத்து இட்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.