நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு எதிரொலி – திருப்பூர் 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணி

திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.   திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகளிலும்…

திக்கு முக்காடும் திருப்பூர் என்ற தலைப்பில் நியூஸ் 7 தமிழ் கள ஆய்வு மேற்கொண்ட நிலையில், 4-வது மண்டலத்தில் சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது.

 

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் 60 வார்டுகளிலும் நேற்று நாள் முழுவதும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி கள ஆய்வு மேற்கொண்டது. அங்கு பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக சாலைகள் மிகவும் மோசம் அடைந்து சாலைகள் சீரமைக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

 

மேலும் வாகன ஓட்டிகள் சந்திக்கும் பிரச்சனைகள் அதனால் ஏற்படும் வாகன விபத்துக்கள் குறித்து செய்திகள் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மேயர், மண்டல தலைவர், மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் நியூஸ் 7 தமிழுக்கு விளக்கம் அளித்து இருந்தனர்.


இந்நிலையில், இன்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மண்டலம் சுண்ட மேடு பகுதியில் இருந்து இடுவம்பாளையம் வரை சுமார் 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்காம் குடிநீர் திட்ட குழாய் பதிப்பு பணிகள் நிறைவடைந்த இடங்களில் சாலைகள் சீரமைப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்னும் நான்கு தினங்களில் இப்பகுதியில் முழுவதுமாக சாலை சீரமைப்பு பணி முடிவடையும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் நான்காவது மண்டலத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். இப்பகுதியில் சாலை மிகவும் மோசமடைந்ததையும் இதனால் ஏற்பட்ட சாலை விபத்துக்கள் குறித்தும் நேற்றைய கள ஆய்வில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.