வெளிமாநில தொழிலாளர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளைக் கண்காணிக்க மற்றும் பத்திரிகைகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மாநில அளவில் 8 ஒருங்கிணைப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 குழுக்களை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள், தமிழகத்திலிருந்து வெளிமாநிலத்தில் சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தில் படிக்கும் வெளிமாநில மாணவர்களை பாதுகாக்க ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 பேர் கொண்ட இந்த குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் நசிமுதீன், செல்வி அபூர்வா, மைதிலி ராஜேந்திரன் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜெயஸ்ரீ ரகுநந்தன், விஜயராஜ் குமார், மதுமதி ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பத்திரிகைகள் மற்றும் செய்தி தொலைக்காட்சிகளை ஒருங்கிணைக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் குமரகுருபரன், பாஸ்கர பாண்டியன், தீபக் ஜேகப் ஆகிய 3 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.







