டெல்லியில் தற்போதுள்ள இந்திய நாடாளுமன்றக் கட்டடம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. இதை, எட்வின் லூடெய்ன்ஸ், ஹெர்பெர்ட் பேக்கர் ஆகிய இங்கிலாந்து பொறியாளர்கள் வடிவமைத்தனர். கட்டுமான பணிகள், 1921 ஆம் ஆண்டு தொடங்கி 1927-ஆம் ஆண்டு நிறைவு பெற்றன.
தற்போதுள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை, அலுவலக பணியாளர்கள், வருகை தரும் பொது மக்கள், நவீன பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு வசதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2019ம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 2020 டிசம்பர் 10ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
குஜராத் நிறுவனத்தின் வடிவமைப்பு
நாடாளுமன்ற புதிய கட்டடத்தை குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த ஹெச்.சி.பி. டிசைன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது. டாடா புராஜெக்ட்ஸ் லிமிடெட் கட்டுமான பணிகளை மேற்கொண்டது. நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் இல்லங்கள், முக்கிய அலுவலங்கள் என சுமார் ரூ. 20 ஆயிரம் கோடியில் சென்ட்ரல் விஸ்டா திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் 2026ம் ஆண்டுக்கும் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதில், நாடாளுமன்ற கட்டடம் சுமார் ரூ.970 கோடியில் திட்டமிட்டு, கட்டப்பட்டுள்ளது. விலைவாசி, மூலப் பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் கட்டுமான செலவு 30% உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்ற புதிய கட்டடம் முக்கோண வடிவில் அமைந்துள்ளது. அதன் மேற்பரப்பில் கூம்பு வடிவிலான ஓர் அமைப்பும், அதற்கு அருகில் மூவர்ணத்துடன் கூடிய ஸ்தூபி (அரைக்கோளம்) வடிவ அமைப்பும் உள்ளன.
நாடாளுமன்ற பழைய கட்டடத்தின் அருகில் 13 ஏக்கர் பரப்பில் சென்ட்ரல் விஸ்டா என்கிற பெயரில் புதிய கட்டுமானங்கள் அமைகின்றன. மக்களவையில் மட்டும் 888 எம்.பி.க்கள் வரை அமர முடியும் என்றும் ‘ஹெச்.சி.பி. டிசைன்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் 384 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வடிவமைப்பாளர் விளக்கம்
இந்த கட்டடத்தை வடிவமைத்துள்ள கட்டடக் கலைஞர் பிமல் படேல் கூறுகையில், ’தற்போதைய மக்களவையில் எம்.பி.க்களுக்கான இருக்கைகள் மிகக் குறுகலாக இருக்கின்றன. போதிய இடமில்லாத காரணத்தால், தூண்களுக்கு பின்னால் கூட இருக்கைகள் அமைக்கும் நிலை உள்ளது. இந்த நெருக்கடியை களையும் விதமாக, புதிய நாடாளுமன்றத்தில் பெரிய அளவிலான இருக்கைகளை வடிவமைத்திருக்கிறோம்.
சபாநாயகர் அல்லது ஒரு உறுப்பினர் பேசுகையில், அனைத்து உறுப்பினர்களும் அது தெளிவாக கேட்கும் வகையிலும் கட்டிடத்தின் உள்பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் வெளிப்புறத்தில் அமைச்சக அலுவலகங்களை கட்ட திட்டமிட்டுள்ளோம்’’ என்கிறார். நாடாளுமன்ற கட்டுமான பணிகள் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. அரசியல் சட்ட அரங்கம், எம்.பி.க்கள் ஓய்வெடுக்கும் பகுதி, நூலகம், நிலைக் குழுக்களின் அறைகள், உணவகம், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்டவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
28ம் தேதி திறப்பு விழா
மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘சென்ட்ரல் விஸ்டா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் கட்டுமானம் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த புதிய கட்டடம் சுயசார்பு இந்தியா திட்டத்தை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. பழைய கட்டடத்தில் உள்ள மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் எம்.பி.க்கள் அமர்வதற்கு போதிய இடவசதி இல்லை. இதனால் மக்கள் பிரதிநிதிகளின் பணித்திறன் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி வரும் 28-ம் தேதி புதிய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
19 கட்சிகள் கூட்டாக எதிர்ப்பு – விழா புறக்கணிப்பு
காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, சிவ சேனா (உத்தவ் தாக்கரே பிரிவு), சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிபிஎம், சிபிஐ, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் தளம், கேரள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டுக் கட்சி, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி, மதிமுக, விசிக ஆகிய 19 கட்சிகள் விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இந்த கட்சிகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்துவிட்டு, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை தானே திறந்து வைக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் முடிவானது, குடியரசுத் தலைவருக்கு அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும். நாடாளுமன்றத்தில் இருந்து ஜனநாயகத்தின் ஆன்மா உறிஞ்சப்பட்டுவிட்ட நிலையில், அந்தப் புதிய கட்டிடத்திற்கு மதிப்பு இல்லை. எனவே, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் எங்களின் கூட்டு முடிவை அறிவிக்கிறோம். சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் அவரது அரசுக்கு எதிராக, தொடர்ந்து போராடுவோம்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டறிக்கையில் கையெழுத்திடவில்லை என்றாலும் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியும் திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எடுத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் இது உள்ளது. நாடாளுமன்ற புதிய கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. தற்போது, திறப்பு விழாவிற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை.’’
மேலும், ‘’இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகன் நாடாளுமன்ற புதிய கட்டடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும்.
மோடி அரசு தொடர்ந்து உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது” என்று கார்கே கூறியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி டிவிட்டர் பக்கத்தில் ”புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது. குடியரசு தலைவர் திறந்து வைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கர் பிறந்த நாளில் திறப்பு விழா
திறப்பு விழா நடைபெற இருக்கும் தேதியான மே 28-ந் தேதி, விடுதலைப் போராட்ட வீரரும் இந்து மகா சபாவின் தலைவருமான சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால், அந்த தேதியை தேர்ந்தெடுத்ததற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ”இது, தேசத்தின் முன்னோர்களுக்கு இழைக்கப்படும் அவமானம்” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா கூறுகையில், “நாட்டின் நிர்வாக பிரிவின் தலைவராக பிரதமர் இருக்கிறார். நாடாளுமன்றமானது, சட்டம் இயற்றும் பிரிவாக இருக்கிறது. எனவே, நாட்டின் தலைவர் என்ற முறையில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அதை திறந்து வைப்பதுதான் உகந்ததாக இருக்கும். மோடியை பொறுத்தவரை, சுய கவுரவம், கேமரா ஆகியவற்றின் மீதான ஆர்வத்தால், நாகரிகத்தையும், விதிமுறைகளையும் புறம் தள்ளுகிறார்” என்று கூறியுள்ளார்.
ராஷ்டிரீய ஜனதாதள மூத்த தலைவர் மனோஜ்குமார் ஜா கூறுகையில், ”நாடாளுமன்ற புதிய கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்கக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதின் ஒவைசி எம்.பி. தனது டிவிட்டர் பக்கத்தில், ”புதிய கட்டடத்தை பிரதமர் ஏன் திறக்க வேண்டும்? அவர் நிர்வாக அமைப்பின் தலைவர். சட்டம் இயற்றும் அமைப்பின் தலைவர் அல்ல. மக்களவை சபாநாயகரோ, மாநிலங்களவை தலைவரோ கூட திறந்து வைக்கலாம். அது மக்கள் பணத்தால் கட்டப்பட்டது. பிரதமர் ஏன் தன்னுடைய நண்பர்களின் சொந்த பணத்தால் கட்டப்பட்டதுபோல் நடந்து கொள்கிறார்?” என்று கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் அழைப்பு
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், ”நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா மிக முக்கிய நிகழ்வு. இதில் எதிர்க்கட்சிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். அரசியல் செய்வதற்கான நேரமல்ல’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில் “1975-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தை திறந்து வைத்தார். ஆகஸ்ட் 15, 1987 அன்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்துக்கு அடிக்கல் நாட்டினார்” என்றும் தேசிய உணர்வு மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்தில் பெருமை இல்லை. அனைத்து ஜனநாயகங்களின் தாயின் புதிய இந்தியாவின் கோவிலாக, சந்ததியினருக்கான மதிப்புமிக்க சொத்தின் இந்த உருவாக்கத்தை கொண்டாடுவதில் அவர்களால் ஏன் தேசத்துடன் இணைந்து கொள்ள முடியவில்லை. பொய்களின் அடிப்படையில் பாகுபாடான விவாதங்களில் ஈடுபடுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் பூரியின் கருத்து குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “நாடாளுமன்ற இணைப்பு கட்டடம், நூலகத்தை திறப்பதற்கும் ஜனநாயக கோயிலின் கர்ப்பக்கிரகத்தை திறந்து வைப்பதற்கும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக, 1975-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்தபோது, 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி அப்போதைய ஜனாதிபதி வி.வி கிரி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டினார். இது, மே 2014 இல் ‘பார்லிமென்ட் ஹவுஸ் எஸ்டேட்’ என்ற தலைப்பில் லோக்சபா செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற நூலகக் கட்டடத்துக்கு, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி 1987-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார், மேலும் 1994-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் வி பாட்டீல் பூமி பூஜை செய்தார் என்று மக்களவை வெளியீட்டில் உள்ளது.” என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி ஜெய்ராம் ரமேஷ் பதில் அளித்துள்ளார். அதேநேரத்தில், அதிமுக, அகாலி தளம், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திறப்பு விழாவில் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழர் செங்கோல் – அமித்ஷா அறிவிப்பு
இந்நிலையில், மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ’’நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் சோழர் காலத்து செங்கோல் நிறுவப்பட உள்ளது’’ என்றும் அறிவித்துள்ளார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியர்களுக்கு அதிகாரம் மாற்றப்பட்டதன் அடையாளமாக இருந்த வரலாற்றுச் சின்னமான செங்கோல் மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சோழப் பேரரசர் காலத்திலிருந்தே செங்கோல் முக்கியத்துவம் வாய்ந்தது. இது புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்படும்’’என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்தபோது ஆகஸ்ட் 14, 1945 அன்று, சுமார் 11:45 மணியளவில் ஜவஹர்லால் நேரு இந்த செங்கோலை பெற்றுக் கொண்டார். நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் இந்தச் செங்கோலை வழங்கினார்.
ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்நாட்டு மக்களிடம் அதிகாரம் மாறியதற்கான அடையாளம் இந்த செங்கோல். முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய செங்கோல், அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போதுள்ளது. இது பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டு, நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவப்படும். என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
எம்.பிக்கள் எண்ணிக்கை உயருமா..?
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, ’மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது திறக்கப்படும் நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கூடுதல் எம்.பிக்கள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. இதையடுத்து மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுமா…? ஒருவேளை அதிகரிக்கப்பட்டால் எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படும்? உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன. மக்கள் தொகை அடிப்படையில் அதிகரிக்கப்பட்டால், தென் மாநிலங்களை விட வட மாநிலங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும். இதனால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநித்துவம் குறையுமா..? என்கிற கேள்வி எழுந்துள்ளது.








