”பெண்கள், புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்” – யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் பேட்டி

ஐஏஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட பின்னர் பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் தெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர்…

ஐஏஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட பின்னர் பெண்கள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த இஷிதா கிஷோர் தெரிவித்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் முதலிய உயர் பதவிகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்கான சிவில் சர்வீச் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று நிலைகளில் இந்த தேர்வு தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியானது. அடுத்த நிலையான நேர்காணல் கடந்த மே 18 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த யுபிஎஸ்சி தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியானது.

180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உள்ளிட்ட 1,011 இடங்களுக்கு நடத்தபட்ட தேர்வில், மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் இந்திய அளவில் முதல் 4 இடங்களை, இஷிதா கிஷோர், கரிமா லோகியா, உமா ஹராதி, ஸ்மிரிதி மிஷ்ரா என நான்கு பெண்கள் பிடித்து அசத்தினர்.

இதில் முதலிடம் பெற்ற இஷிதா கிஷோர், டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியில், பொருளாதாரத்தில் (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர். மறைந்த விமானப்படை அதிகாரியின் மகளான இஷிதா கிஷோர், தனது மூன்றாவது முயற்சியில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். 26 வயதாகும் இவர் பன்னாட்டு நிறுவனமான எர்ன்ஸ்ட் அண்ட் யங் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். தேசிய அளவிலான கால்பந்து வீரராகவும் திகழும் இஷிதா கிஷோர், 2012ல் சுப்ரோடோ கோப்பை கால்பந்து தொடரில் விளையாடியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இஷிதா கிஷோர், தற்போது நொய்டாவில் வசித்து வருகிறார்.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று, இந்திய அளவில் முதலிடம் பிடித்தது குறித்து பேசிய இஷிதா, “யுபிஎஸ்சி தேர்வில் முதலிடம் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. என்னுடைய கனவு நனவாகியிருக்கிறது. தேர்வுக்குத் தயாராக ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு முதல் ஒன்பது மணி நேரம் படிப்பேன். இந்த வெற்றி எனது கடின உழைப்புக்கு கிடைத்த கூலி. ஐஏஎஸ் அதிகாரியாக பணியமர்த்தப்பட்ட பின்னர் பெண்களின் அதிகாரத்திற்காகவும், புறக்கணிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காகவும் பாடுபடுவேன். நாட்டிற்காக பணியாற்றுவது எனக்கு கிடைத்த மரியாதை. சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் இரண்டு முயற்சிகளில் தேர்ச்சி பெற முடியாமல் போனபோது என்னுடன் நின்ற எனது குடும்பத்தினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இஷிதா கிஷோருக்கும் நாட்டின் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியின் இயக்குநர் பூமிநாதன், இஷிதா கிஷோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.