சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், நேற்று வரை 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை பல மடங்கு உயர்த்தி மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் கடந்த மாதம் 16-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த நாள் முதல் நேற்று வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30,699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரத்து 125 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இதில் 12,625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70 லட்சத்து 46 ஆயிரத்து 196 ரூபாய் வாகன ஓட்டிகளிடம் பெறப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8,240 வழக்குகள் பதிவு செய்து 42 லட்சத்து 78ஆயிரத்து 808 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பின்னால் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக 4,728 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 லட்சத்து 2 ஆயிரத்து 618ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக ஆயிரத்து 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 67லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








