வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த ரூ.14 கோடி மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி, கொரனா என மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் தற்போது அந்த துறை சிறந்து விளங்குவதாக…

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு, ஜி எஸ் டி, கொரனா என மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்ட சிறு குறு தொழில்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டதன் மூலம் தற்போது அந்த துறை சிறந்து விளங்குவதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கி பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், திமுக அரசு பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் புதிய தொழில்முனைவோரை உருவாக்கும் பொருட்டு, 656 கோடி மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். பொருளாதாரத்தில் சமூகநீதியை நிலைநாட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரத்து 901 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் தாமோ அன்பரசன் பேசினார்.

தொழில் முனைவோர், தொழில் உரிமங்கள் பெறுவதில் உள்ள சிரமங்களை போக்க, ஒற்றைச் சாளர முறையின் மூலம் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்து 603 உரிமங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் பதிலுரையில் கூறினார். குறு சிறு குழுமங்களுகாக மத்திய அரசால் ஒப்புதல் பெறப்பட்ட 43 பொது வசதி மையங்களில் தற்போது 28 பொது வசதி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, இந்த திட்டத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்வதாகவும் தாமோ அன்பரசன் பெருமிதம் கொண்டார்.

இதனை தொடர்ந்து, பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் முள்ளிகொளத்தூரில், 28 ஏக்கரில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கக்கூடிய வகையில் ரூ.14 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய தொழிற்பேட்டை ஒன்று தமிழ்நாடு சிட்கோ மூலம் அமைக்கப்படும் என்றும், கிண்டியில் ரூ.175 கோடியில் தொழில்முனைவோருக்கு பயன்படத்தக்க அடுக்குமாடி தொழில் வளாகம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் 2200 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து மகளிர் தொழில் முனைவோர்கள் பயன் பெறும் வகையில் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் ரூ.1.15 கோடியில் மகளிர் எம்ராய்டரிங் குழுமம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், கரசமங்கலத்தில் ரூ.3.39 கோடியில் மண்பாண்ட குழுமம் அமைக்கப்படும். கிருஷ்ணகிரி மற்றும் மதுரை மாவட்டங்களில் சிட்கோ மூலம் குறுத்தொழில் முனைவோரின் தேவையை பூர்த்தி செய்து வேலை வாய்ப்புகள் வழங்கக் கூடிய வகையில் அடுக்குமாடி தொழில் வளாகம் கட்டப்படும். புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விருதுநகர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் சிட்கோ மூலம் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். இதன் மூலம் 6200 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க திட்ட உச்ச வரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.3.75 லட்சமாக உயர்த்தப்படும். தருமபுரி மாவட்டத்தில் ரூ.2.25 கோடி மாநில அரசு பங்களிப்புடன் ரூ.3 கோடியில் விசைத்தறி குழுமம் அமைக்கப்படும். கோவையில் மாநில அரசு பங்களிப்புடன் ரூ.7.33 கோடியில் பாக்கு மட்டை குழுமம் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம், அப்துல்லாபுரத்தில் ரூ.1 கோடியில் தேன் பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும் போன்ற எண்ணற்ற திட்டங்களை அறிவித்தார்.

மேலும் புதிய கண்டு பிடிப்புகளை ஊக்கப்படுத்திடும் புத்தாக்க பற்று சீட்டு திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 242 புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கு 6 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.