ரேஷன் பொருட்களை வீட்டிற்கே டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங் இன்று அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தது. தேர்தலை சந்திக்கும் போதே முதலமைச்சர் வேட்பாளர் பகவத் மான் சிங், பஞ்சாப் மாநிலத்தை மற்ற நாடுகளை போன்று அல்லாமல் மீண்டும் பழைய பஞ்சாப்பாக மாற்ற இருப்பதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிகப்படியான சட்டமன்றத் தொகுதிகளை பிடித்த ஆம் ஆத்மி ஆட்சியை அமைத்துள்ளது.
புதிய ஆட்சியை அமைத்துள்ள இந்த அரசு புதுப்புது திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் சிங், “மக்களின் வீடுகளுக்கு ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆம் ஆத்மி அரசு, மக்களின் வீட்டிற்கே ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யும் திட்டத்தை துவங்கியுள்ளது. இதன் மூலம் தரமான ரேஷன் பொருட்கள் டெலிவரி செய்யப்படும். இனி சாமானியர்கள் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று பொருட்களை வாங்க காத்திருக்க தேவையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, எங்களது அதிகாரிகள் மக்களுக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, மக்களின் விருப்பத்திற்கேற்ப பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், டெல்லி அரசு இந்த திட்டத்தை முன்பே துவங்கியது. ஆனால் யாரும் எதிர்ப்பாராத விதமாக அந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. பஞ்சாப்பில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், வீட்டிற்கே ரேஷன் பொருட்களை டெலிவரி செய்யப்படும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நேரம் இப்போது வந்துள்ளது. டெல்லி அரசு இதனை செயல்படுத்த முடியாத நேரத்திலும் பஞ்சாப் அரசு செயல்படுத்தியுள்ளது. பஞ்சாப்பின் இந்த செயலை நாடே உற்று நோக்குகிறது, மேலும் நாட்டு மக்கள் அனைவரும் இந்த திட்டத்தை வரவேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் குறித்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர், “மக்களுக்காகத்தான் அரசு இருக்கிறது. மக்கள் ஓட்டு போட்டே அரசை தீர்மானிக்கின்றனர். அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு இருக்கிறதே தவிர, மக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்த அரசு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.









