துபாய் மற்றும் அபுதாபி பயணத்தின் மூலம் 6,100 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அபுதாபியில் பாராட்டு விழா நடைபெற்றது. அபுதாபியில் வாழும் தமிழர்கள் சார்பாக நடைபெற்ற இந்த பாராட்டு விழாவில் பங்கேற்று மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.
அப்போது, முதலமைச்சராக தான் பொறுப்பேற்ற பிறகு நிகழ்ந்துள்ள இந்த முதல் வெளிநாட்டு பயணம் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறினார். இந்த பயணத்தின் மூலம், 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். இந்த வெற்றியை தமிழ்நாட்டில் உள்ள சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என விமர்சித்த அவர், தமிழ்நாட்டில் இருந்து தான் பணத்தை எடுத்து வரவில்லை, தமிழ் மக்களின் மனங்களைத்தான் கொண்டு வந்திருப்பதாகக் கூறினார்.
முதலமைச்சர் என்ற பதவி கிடைத்திருப்பதாக தான் கருதவில்லை என்றும், முதலமைச்சர் எனும் பொறுப்பு கிடைத்திருப்பதாகவே எண்ணுவதாகவும் அவர் தெரிவித்தார். இதேபோல், மக்களில் ஒருவனாகவே தன்னை கருதிக்கொள்வதாகவும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். துபாயிலும், அபுதாபியிலும் தமிழர்கள் தனக்கு அளித்துள்ள வரவேற்பால் மகிழ்ச்சியில் திளைத்திருப்பதாகத் தெரிவித்த அவர், வெளிநாட்டில் இருப்பது போன்ற உணர்வே தனக்கு இல்லை என குறிப்பிட்டார்.








