உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தையே தீர்வு; ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன்  பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று…

ரஷ்யா- உக்ரைன் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தொலைபேசியில் ரஷ்ய அதிபர் புதினுடன்  பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடினார். அப்போது இந்தியா-ரஷ்யா இடையே எரிசக்தி, வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிடத் துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கி 9 மாதங்கள் ஆகிறது. கடந்த செப்டம்பரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டின் போது, இது போருக்கான சகாப்தம் அல்ல என அதிபர் புதினிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். அதேபோல் இந்த தொலைபேசி உரையாடலின் போதும் ரஷ்யா-உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

மேலும், ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா தலைமையேற்று நடத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபரிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். தலைமை பொறுப்பின் போது இந்தியா முக்கியத்துவம் அளிக்கவுள்ள விவகாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

எரிசக்தி ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடுகள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் நிலவி வரும் இருதரப்பு நல்லுறவு தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்புக்கு இந்தியா அடுத்த ஆண்டு தலைமையேற்க உள்ள நிலையில் ரஷ்யாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி விவாதித்தார்.

பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நிலவி வரும் ஒத்துழைப்புக்கு அதிபர் புதின் திருப்தியை வெளிப்படுத்தினார். பரஸ்பர முதலீடு, எரிசக்தி, வேளாண்மை, போக்குவரத்து, சரக்கு கையாளுகை உள்ளிட்ட துறைகளில் இருதரப்புகளில் நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக தலைவர்கள் விவாதித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.