2024ம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் சாலைக் கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்துக்குச் சமமாக இருக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
95வது எஃப்ஐசிசிஐ ஆண்டு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். இதில் உரையாற்றிய அமைச்சர், நாட்டில் உலக தரமான சாலை உள்கட்டமைப்பை உருவாக்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு இறுதிக்குள், சாலை கட்டமைப்புகள் அமெரிக்க தரத்திற்கு சமமாக இருக்கும் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று கூறினார்.
சாலை போக்குவரத்தில் லாஜிஸ்டிக்ஸ் அதிகளவில் பிரச்னைகள் எதிர்கொள்ளபடுகிறது. தற்போது 16% ஆக உள்ள செலவு 2024ம் ஆண்டில் 9% வரை ஒற்றை இலக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். உலகளாவிய அளவில் கட்டுமானத் துறையில் 40% எஃகு பயன்பாடு உள்ளது. கட்டுமான பணிகளில் எஃகு பயன்பாட்டை குறைக்க மாற்று வழிகளை நாம் தற்போது கடைபிடிக்கிறோம். அதேசமயம் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்கவும், தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார்.
பசுமை ஹைட்ரஜன் எதிர்காலத்திற்கான எரிபொருளாகும். இந்தியா தன்னை ஒரு ஆற்றல் ஏற்றுமதியாளராக வடிவமைத்துக்கொள்ள ஒரு சிறந்த நிலையில் உள்ளது. இது இந்தியாவில் பசுமை ஹைட்ரஜனின் ஆற்றலின் காரணமாக மட்டுமே இது சாத்தியமாகும்.
எதிர்காலத்தில், விமானம், ரயில்வே, சாலை போக்குவரத்து, ரசாயனம் மற்றும் உரத் தொழில்களில் பசுமை ஹைட்ரஜன் ஆற்றல் ஆதாரமாக இருக்கும். எதிர்காலத்தில் பசுமை ஹைட்ரஜனின் உலகளாவிய உற்பத்தி மையமாகவும், ஏற்றுமதியாளராகவும் இந்தியா மாறும் என்று கூறினார்.







