நீட்: ’குடியரசு தலைவர் உடனடியாக தலையிட வேண்டும்’ – எம்.பி டி.ஆர்.பாலு

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது.…

நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் குடியரசு தலைவர் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா ஏற்றப்பட்டு 5 மாதங்களாகிறது. கடந்த 5 மாதமாக ஆளுநர் புதிய மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை குறித்து மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.

அப்போது பேசுகையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் 30க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

ஆளுநர் ஒப்புதல் வழங்குவது தொடர்பாக, தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சரிடம் மனு அளித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், அனைத்து தளங்களிலும் சென்று முறையிட்ட பிறகும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு முறையும் தேவை எழும்போது மாநில நலன்களைக் கோரி பிச்சை பாத்திரம் ஏந்தி டெல்லி வரை வருவது சரியாக இருக்காது என்று தெரிவித்த டி.ஆர்.பாலு, இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு நீட் விலக்கு மசோதாவை தமது பரிசீலனைக்கு அனுப்பி வைக்க மாநில ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.