முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தாக்கத்தை ஆராயும் ஆணையத்தை கலைக்க வேண்டும்: எல்.முருகன்

“நீட் தேர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்துள்ள ஆணையத்தை கலைக்க வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் நலன் கருதி நீட் உள்ளிட்ட நடப்பு ஆண்டுக்கான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்துசெய்ய வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதினார். நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று வெளியிட்ட அறிக்கையில்,  “ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த திமுகவினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர்” என்று குற்றம்சாட்டியுள்ளார். 

2010ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட எல்.முருகன்,  “இதன் காரணமாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர முந்தைய அரசு துணை புரிந்தது. இதனை தடுப்பதற்கு திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் முயல்கின்றார். இது தான் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் மீது காட்டும் பரிவா?” என்று கேள்வி எழுப்பினார். 

ஏ.கே.ராஜன் ஆணையத்தை சுட்டிக்காட்டிய எல்.முருகன், “தமிழக அரசு மேற்கொள்ளும் இதுபோன்ற செயல், நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிச்சயம் குழப்பத்தை ஏற்படுத்தும்,  இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செய்யாமல் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.  தேவையின்றி தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை கலைத்துவிட்டு மாணவர்களை தேர்விற்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Advertisement:

Related posts

குன்னூரில் மீண்டும் தொடங்கிய தடுப்பூசி செலுத்தும் பணி!

Gayathri Venkatesan

சுற்றுச்சூழல் பாதுகாப்பும், அரசியல் கட்சிகளின் அறிவிப்புகளும்!

Saravana Kumar

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் நேர்மைக்கும், ஊழலுக்கும் இடையேயான போர்; கமல்ஹாசன் கருத்து!

Saravana