நீட் தேர்வு ரத்து குறித்து பிரதமருக்கு அழுத்தம் அளிக்க வேண்டுமென முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இருந்தாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் தொடர்ச்சியாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக நாளை டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளார் மு.க.ஸ்டாலின். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள், நிதிகள் தொடர்பாகவும் கோரிக்கை வைக்கவுள்ளார்.
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வை ரத்துசெய்ய நம் கண் முன் இருக்கும் ஒரே நடவடிக்கை, அதற்கான சட்டத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றி குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறுவதுதான் என்று கூறியுள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ள ஓ.பன்னீர்செல்வம், “பிரதமரை நேரில் சந்திக்கும்போது இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து நீட் தேர்வை அகில இந்திய அளவில் ரத்துசெய்ய அழுத்தம் அளிக்க வேண்டும்” என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.