முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

பெண்கள் மீதான ‘மார்ஃபிங்’ மிரட்டல்கள் – தற்கொலை தீர்வல்ல!


சி.பிரபாகரன்

கட்டுரையாளர்

இளைய தலைமுறையினரையும் சமூக வலைதளங்களையும் பிரிக்க முடியாத ஒன்றாக இன்று இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு தூங்க செல்வது வரை ஆண், பெண் என இரு பாலரும் செயலிகள் மூலம் அதிகம் புழங்கும் இடம் சமூக வலைத்தளம். எனினும், சமூக வலைத்தளங்கள் அனைவருக்குமான ஒரு ஆயுதமாகவே திகழ்கிறது. அதை சரியாக பயன்படுத்துவோருக்கு நன்மை பயக்கிறது. தவறாக பயன்படுத்த நினைப்போருக்கு கழுத்துக்கு கத்தியாக மாறுகிறது. இதில் பெரும்பாலும் பெண்களே பல்வேறு ரீதியில் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஜூன் 14ஆம் தேதி, கல்லூரி மாணவர் ஒருவர் சக மாணவியின் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், அந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அந்த மாணவர் மாணவிக்கு தெரியாதவரோ வேறு யாரோ மூன்றாவது மனிதரோ அல்ல. அந்த மாணவியின் நெருங்கிய நண்பர் ஆவார். இந்த ஒரு தற்கொலை சம்பவம் மட்டுமல்ல. இதுபோன்று பெண்களுக்கு எதிரான பல்வேறு பிரச்னைகளும் மிரட்டல்களும் சமூக வலைத்தளங்களில் நிகழ்ந்து வருகின்றன. இதில் வழக்குகளாக பதியப்பட்டவை சில மட்டுமே. வழக்குகளாக பதியப்படாமல் இருப்பவை எண்ணிலடங்காதவை. இது போன்ற மார்ஃபிங் மிரட்டல்களை தாங்க இயலாத பெண்கள், மனதளவில் பாதிக்கப்பட்டு, எடுக்கும் இறுதி முடிவே ‘தற்கொலை’.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொதுவாக பெண்கள் பல இடங்களில் தங்கள் புகைப்படங்களை பதிவிடவும், பகிரவும் நேரிடுகிறது. தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பெருவாரியான பெண்கள் தங்களின் புகைப்படங்களை பதிவிடுவதுண்டு. தங்கள் நண்பர் நண்பிகளுக்கு அல்லது காதலுருக்கு தங்களின் புகைப்படங்களை பகிரும் வழக்கமும் பெண்கள் மத்தியில் உண்டு. இதில் தவறு ஏதும் இல்லையென்றாலும், பெண்களை மிரட்டி தங்கள் தேவையை அடைய நினைக்கும் சில விஷமிகளுக்கு இந்த புகைப்படங்கள் சாதகமாக அமைந்துவிடுகிறது. படங்களை சுலபமாக பதிவிறக்கம் செய்ய இயலும் நபர்கள், அதனை ‘மார்ஃபிங்’ செய்து மிரட்டவும் செய்கிறார்கள்.

பெண்கள் ஏன் “மார்ஃபிங்” மிரட்டலுக்கு அஞ்சுகிறார்கள்?

நிர்வாணம் என்பது பொதுவெளியிலும் சமூக வலைத்தளத்திலும் ஆபாசம் என கருதப்படுகிறது. ஆபாசம் என்பது ‘தவறான அல்லது கட்டுப்பாடுகளுக்கு எதிரான செயல்’ என்று நாம் பொருள் கொள்ளலாம். எனவே பெண்கள், தங்களின் புகைப்படம் ‘ஆபாசமாக’ சமூகத்தளத்தில் உலா வருவதை ஏற்க இயலாது, தற்கொலை போன்ற முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

சமூகத்தின் அணுகுமுறை சரியானதா?

தற்கொலை தீர்வல்ல என்று பெண்களுக்கு நாம் அறிவுரை கூறும் முன் நம்மையும் நம் சமூகத்தையும் நாம் கேள்வி கேட்க வேண்டியது கட்டாயமாகிறது. அந்த பெண்ணின் தற்கொலைக்கு காரணம் அந்த “மார்ஃபிங்” செய்யப்பட புகைப்படம் மட்டும் அல்ல. அதன் பின் அவள் மனதில் ஓடும் என்ன ஓட்டங்களும் தான். ஒரு பெண்ணின் நிர்வான புகைப்படமானது, சமூக வலைதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது என்று அந்த பெண்ணிற்கு தெரியவரும்போது அந்த பெண்ணின் நெஞ்சம் முதலில் பயத்தில் பதப்பதைக்கிறது. “இதை என் பெற்றோர் பார்த்தால் என்ன ஆகுமோ? என் நண்பர்கள் பார்த்தால் என்ன ஆகுமோ? என் உறவினர்கள் பார்த்தால் என்ன ஆகுமோ? என் கணவர் பார்த்தால் என்ன நினைப்பாரோ? என் குழந்தைகள் பார்த்தால் என்னை என்ன நினைப்பார்கள்?” என்றே முதலில் அவர்கள் எண்ணி அஞ்சுகின்றனர்.

“அனைவரும் என்னை கேலி செய்வார்கள், என்னை தவறானவள் என்று முத்திரை குத்திவிடுவார்கள், என்னை தவறான பெயரினால் அழைப்பார்கள், எனக்கு இனி எப்படி திருமணம் நடக்கும்?, என்னால் என்னை சார்ந்தோர்க்கும் சமூகத்தில் மரியாதை இருக்காது” என்பன போன்ற எண்ணங்களும், அந்த பெண் மீதும் அந்த பெண்ணை சார்ந்தோர் மீதும் ஏவப்படும் கேள்விக்கணைகளே தற்கொலை முடிவிற்கு முழுவதுமாக தள்ளி விடுகிறது. ஆகையால், அந்த பெண்ணின் தற்கொலை முடிவிற்கு நமக்கும் நாம் பலவீனமாக கட்டமைத்திருக்கும் சமூகத்திற்கும் பெரும் பங்கு உண்டு என்பதனை உணர வேண்டும்.

பெண்ணும், பெண்ணை சார்ந்தோரும் செய்ய வேண்டியது என்ன?

இது போன்ற சமூக வலைதள மிரட்டல்களை பெண்களும் அவர்களை சார்ந்தோரும் எதிர்கொள்ள பெரும்பாலும் அஞ்சுகின்றனர். அதற்கு காரணம் சமூகத்தில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்படும் என்ற அச்சம் மட்டுமே. இந்த அச்சம் தான் மிரட்டும் விஷமிகளுக்கு சாதகமாக அமைந்துவிடுகிறது. மேலும் அந்த அச்சத்தை தங்களின் தேவைகளுக்காக பயன்படுத்தி கொண்டு உடல் ரீதியான பொருளாதார ரீதியான தேவைகளை மிரட்டல்கள் மூலம் அவர்கள் பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

பெண்களும் அவர்களை சார்ந்தோரும் தங்களுக்கு ஏற்படும் இதுபோன்ற மிரட்டல்களை தைரியமாக எதிர்கொள்ளுதல் அவசியம். மார்ஃபிங் செய்யப்பட்டிருந்தாலும் அல்லது உண்மையான தங்களின் நிர்வாண புகைப்படமே சமூகவலைதளத்தில் பகிரப்பட்டாலும் “அதற்கு இந்த சமூகம் என்ன நினைக்குமோ?” என்று அஞ்சி நடுங்குதலை தவிர்த்தல் வேண்டும். அது வெறும் உடல் சதை புகைப்படமே அன்றி வேறேதும் இல்லை என்றும் வெறும் ஒரு நிர்வாண புகைப்படத்தினையோ வீடியோவினையோ கொண்டு என்னை மிரட்டிவிட முடியாது என பெண்கள் அதனை எளிதாக கடந்து செல்லும்போது,அதை வைத்து மிரட்ட நினைக்கும் எதிராளியை அது பலவீனமடைய செய்கிறது. அதோடு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டவர் தான் குற்றவாளியே தவிர .போட்டோவில் இருக்கும் பெண் அல்ல. அதனால் வெட்கப்பட வேண்டியவர் போட்டோவை ஆபாசமாக சித்தரித்தவர் தானே தவிர அந்த பெண் அல்ல. இந்த தெளிவு இருந்தால் தற்கொலை எண்ணங்களை பெண்கள் தவிர்க்க முடியும்.

மேலும், அதோடு விட்டுவிடாமல் இதனை காவல்துறையினரிடம் எடுத்து செல்ல வேண்டியது அவசியமாகிறது. இதற்காக காவல் நிலையம் செல்ல வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. ஆன்லைனிலேயே பெண்கள் தங்கள் புகாரை பதிவிடலாம். அதுவே முதலில் மிரட்டும் விஷமிகளுக்கு பயத்தை அளிக்கும். பின் சட்டபூர்வமான வழக்குகளும் அதன் தொடர்ச்சியான விசாரணைகள் மட்டுமே இதுபோன்ற மிரட்டல்விடுப்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வழி வகுக்கும். இது போன்ற ஒரு வழக்கின் தீர்ப்பு ஒரு சட்டமாகவும் மாறும் வழி வகை செய்கிறது. அதன் மூலம் சட்டங்கள் அளிக்கும் தண்டனைகள் வலுப்பெறும்போதுதான் தவறுகளும் குறைகின்றன. பொள்ளாச்சி சம்பவத்தில்100க்கும் மேற்பட்ட பெண்கள் நான்கு இளைஞர்களால் மிரட்டப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது, பாதிக்கப்பட்ட ஒரு பெண் தைரியமாக முன் வந்து அளித்த புகாரே என்பதை நாம் மறந்துவிட கூடாது.

பெண்களுக்கு மட்டுமே பிரச்னையா?

நிர்வாண புகைப்படம் என்று வரும்போது ஆண்களும் பிற பாலினத்தவரும் அதில் விதிவிலக்கல்ல. இது போன்ற மிரட்டல்கள் ஆண்களுக்கும் திருநங்கைகள் திருநம்பிகளுக்கும் நடக்கின்றது என்பதே நிதர்சனம். எப்பாலினத்தவரின் நிர்வாண புகைப்படம் பகிரப்படும்போதும் சமூகத்தின் அணுகுமுறை ஒன்றாகவே இருக்கிறது. டிக் டாக்கில் பெண் போல ஆடை அணிய விரும்பும் ஒரு ஆணை பலரும் கேலி செய்து அவரை தற்கொலை முடிவிற்கு தள்ளியது நாம் பலரும் அறிந்ததே. ஆண், பெண், திருநங்கைகள் என எவராயினும் இது போன்ற கேலிகளையும் மிரட்டல்களையும் தைரியத்துடனும், மேலும் சட்டபூர்வமாகவும் அணுக வேண்டியது அவசியமாகிறது.

சமூக வலைதள போராட்டம்:

சமீபமாக சமூக வலைதளங்களில் இது போன்ற மிரட்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் எதிராக “Normalise Nudity” என்ற போராட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. பெண்கள் பெரும்பாலானோர் தங்கள் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு “இதில் எனக்கு எந்த பயமும்,அச்சமும், குற்ற உணர்ச்சியும் இல்லை..பெண்கள் உடல் போகப்பொருள் அல்ல..பெண்கள் இது போன்ற விஷமிகளுக்கு அஞ்ச வேண்டாம் ” என்று #NormaliseNudity என்ற ஹாஷ்டாகுடன் பதிவிட்டிருந்தனர்.
எங்கோ நடக்கும் இது போன்ற தற்கொலைகளுக்கு நாமும் இச்சமூகமும் ஒரு காரணம் என்று நாம் உணராத வரை சமூக வலைதள விஷமிகளின் மிரட்டல்கள் பெண்கள் மீது பாய்ந்து கொண்டு தான் இருக்கும். கால சூழ்நிலைகள் மாற்றத்திற்கு ஏற்றாற்போல் சமூக மாற்றமும் ஏற்பட்டால் மட்டுமே மனித வாழ்வினுள் உள்ள இன்னல்கள் நீங்க அது வழி வகுக்கும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

Saravana

அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்வு

Janani

ஓ.பி.எஸ். அதிமுகவின் உண்மையான தொண்டனா? – தங்கமணி

Web Editor