ஆசிய விளையாட்டுப் போட்டி : வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், ஸ்குவாஷ் ஆண்கள் குழுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோருக்கும் எனது உளமார்ந்த பாராட்டுகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களது வெற்றியைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்கள் திறமை, விடாமுயற்சி மற்றும் குழு உணர்வுடன் களத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

ஸ்குவாஷ் வீரர்கள் வேலவன் செந்தில்குமார் மற்றும் அபய் சிங் ஆகியோரது வெற்றி, இளம் தலைமுறையினர் விளையாட்டுத் துறையில் ஆர்வத்துடனும் தன்னம்பிக்கையுடனும் ஈடுபட உத்வேகம் அளிக்கும். இவ்வீரர்கள் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று, சர்வதேச அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைத்திட வாழ்த்துகள்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.