ரஜினியின் ’தளபதி’ திரைப்படத்தில் வரும் காட்சியைப் போன்று, கங்கையாற்றில் மிதந்து வந்த மரப்பெட்டியி லிருந்த பச்சிளம் குழந்தையை, காசிப்பூர் பகுதி மக்கள் மீட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் காசிப்பூர் மாவட்டம் வழியாக செல்லும் கங்கையாற்றில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்று, கரை ஒதுங்கியது. தாத்ரி காட் பகுதியில் ஒதுங்கிய அந்தப் பெட்டியில் இருந்து குழந்தை ஒன்றில் அழுகுரல் கேட்டது. அந்தப் பகுதியில் சென்றுகொண்டிருந்த படகோட்டி, அழுகுரல் கேட்டு ஆச்சரியமடைந்தார்.
பின்னர் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது சிவப்பு நிற சால்வையில் சுற்றப்பட்ட நிலையில், அழகான பெண் குழந்தை இருந்தது. அந்தப் பெட்டியில் சாமி படங்களும் குழந்தையின் ஜாதகமும் இருந்தன. குழந்தையை மீட்ட அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள் முதலுதவி அளித்து அரசு இல்லத்தில் சேர்த்தனர். குழந்தை பிறந்து 22 நாட்கள்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த குழந்தையை அரசே கவனித்துக்கொள்ளும் என்று உத்தரபிரதேச முதல மைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இதற்கிடையே கங்கை ஆற்றில் மிதந்து வந்ததால், குழந்தைக்கு கங்கா என்று பெயரிட்டுள்ளனர்.







