என்சிஎல் 2023 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றில், மதர் தெரசா கல்லூரி அணியை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
நியூஸ்7 தமிழ் மற்றும் நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் இணைந்து மாபெரும் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. இந்த தொடரில் 4 மண்டலங்களில் இருந்து தலா 8 அணிகள் வீதம், 32 அணிகள் கலந்து கொண்டன. லீக் போட்டிகளைத் தொடர்ந்து காலிறுதிச் சுற்றுகளும் நடைபெற்று முடிந்தன.
இதில் தகுதி பெற்று அரையிறுதிச் சுற்றுக்கு மதுரை சவுராஷ்டிரா கல்லூரி, தூத்துக்குடி மதர் தெரசா கல்லூரி, கோவை ஶ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சி கே.எஸ்.ஆர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய அணிகள் முன்னேறின. இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற முதல் அரையிறுதிச் சுற்று போட்டியில், சவுராஷ்டிரா கல்லூரி அணியும், மதர் தெரசா கல்லூரி அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா கல்லூரி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தென்னரசன் 48 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். மதர் தெரசா கல்லூரி அணி சார்பில் ரோலண்ட் வீனஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படியுங்கள் : என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய விவகாரம் – ஊராட்சி செயலாளர்கள் பணியிட மாற்றத்திற்கு அன்புமணி கண்டனம்
இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதர் தெரசா கல்லூரி அணி, 90 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதுரை சவுராஷ்டிரா கல்லூரி அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. இந்த போட்டியில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சவுராஷ்டிரா கல்லூரி மாணவர் தென்னரசன் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.








